“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படுவதற்கு மலையக மக்கள் முன்னணி தயாராகவே இருக்கின்றது. தொழிலாளர் நலன்சார் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் தயாராகவே இருக்கின்றோம்.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமானவேலுசாமி இராதாகிருஸ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று (30) ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளவிடயத்தில் அமைச்சரவை தொடர்ந்து பல தீர்மானங்களை எடுத்துவருகின்ற போதிலும் இதனுடைய உண்மைத்தன்மை என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியாமல் உள்ளது
அதற்கு காரணம் மலையக மக்கள் சார்பாகவும் அவர்களுடைய கருத்துகளை அமைச்சரவையில் தெரிவிப்பதற்கும் அமைச்சர் ஒருவர் இல்லாமை பெரும் குறையாகும். ஏனெனில் இந்த விடயத்தில் தொழில் அமைச்சர் ஒரு கருத்தையும் ஏனைய அமைச்சர்கள் ஒரு கருத்தையும் அமைச்சரவை ஊடக பேச்சாளர் ஒரு கருத்தையும் கூறிவருகின்றனர்.
எனவே உண்மையான கருத்தை அறிந்து கொள்ள வேண்டுமாக இருந்தால் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒரு இருக்க வேண்டியது கட்டாயமாகும்.மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இல்லாமை பெரும் குறையாகவே இருக்கின்றது.
1000 ரூபா அடிப்படை சம்பள விடயத்தில் எந்த தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதற்கோ அல்லது ஒத்துழைப்பு வழங்குவதற்கோ மலையக மக்கள் முன்னணியும் மலையக தொழிலாளர் முன்னணியும் தயாராகவே இருக்கின்றது. நாங்கள் தொழிலாளர் நலன் சார்ந்த அனைத்து விடயங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவே இருக்கின்றோம்.
எதிர் கட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற கொள்கையில் நானும் இல்லை.எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இல்லை என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
இன்றைய சூழ்நிலையில் தொழிலாளர்களின் நலனுக்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த பல வருடங்களாக இந்த 1000 ரூபா பிரச்சினை இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றது. நல்லாட்சி அரசாங்கமும் இதனை தீர்த்து வைப்பதற்கு உரிய அழுத்தத்தை கொடுக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் வாக்களித்து கொண்டு வந்த ஜனாதிபதியும் பிரதமரும் இதனை செய்யவில்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.” – என்றார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு










