பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ பழுதடைந்த அரிசி, கொட்டகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் இருந்து இன்று (13) மீட்கப்பட்டுள்ளன.
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் இன்று (13) திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பொது சுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் உட்பட சுகாதார பரிசோதகர்கள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போதே இரு வர்த்தக நிலையங்களில் இருந்து பழுதடைந்த அரிசிமூடைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதி ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படவுள்ளது.
இத்தகைய திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடரும் எனவும், சில வர்த்தகர்களுக்கு இதன்போது கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனவும் பொது சுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் தெரிவித்தார்.
கொட்டகலை நகரை சூழவுள்ள பகுதிகளில் பெருந்தோட்டத்தொழிலாளர்களே அதிகம் வாழ்கின்றனர். அவர்களை இலக்குவைத்தே இந்த அரிசி தொகை விற்பனை செய்யப்படவிருந்தது எனக் கூறப்படுகின்றது.
(மலையக குருவியின் சிறப்புச்செய்தியாளர்)










