நாட்டில் ஏற்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக்கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், வேலணை, நீர்வேலி மற்றும் வடமராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.
‘ வடக்கு, கிழக்கில் உள்ள பிரச்சினைகள் போரினால் ஏற்பட்டவை என்று கூறினார்கள். போர் முடிந்து 16 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? இந்தப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கை நிலை முன்னேற்றமடைந்துள்ளதா?” எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளுராட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், குறித்த திட்டங்களுக்குப் பணம் சரியாகச் செலவிடப்படுவதை உறுதி செய்வதற்கு ஒரு வெளிப்படையான பொறிமுறை தேவை.
மே மாதம் 6ஆம் திகதி கிராமத்தை அபிவிருத்தி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்த உங்களுக்கு மிக நெருக்கமான மிகச் சிறிய அரசாங்கத்தை நியமிக்கும் முக்கிய உரிமை உங்களுக்கு கிடைத்துள்ளது. மோசடி அல்லது ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புள்ள பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுங்கள்.” எனவும் பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.
சுதந்திரத்துக்குப் பின்னர், இந்த நாட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டது. மோதல்கள் ஏற்பட்டன. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இந்த நாட்டில் மீண்டும் அந்த நிலை ஏற்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும். நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.