கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புத்தாண்டுக்கு அண்மித்த காலப்பகுதியிலேயே நாட்டில் 3ஆவது அலை உருவானது. இதனால் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வைத்தியசாலை கட்டமைப்பு நெருக்கடி நிலையை எதிர்கொண்டது.
இந்நிலையில் மே மாதமளவில் கடும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் பயனாக ஜுன் 11 ஆம் திகதியளவில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு குறைவு ஏற்பட்டது. நிலைமையை முகாமை செய்யக்கூடிய நிலைமை ஏற்பட்டது.
தற்போதைய நிலைவரப்படி மீண்டும் பழைய நிலைக்கு வைத்தியசாலை கட்டமைப்பு செல்கின்றது. இதனை 4ஆவது அலையாக நாம் அடையாளப்படுத்தலாம். அதாவது 4ஆவது அலையின் ஆரம்பக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம்.
நாட்டில் தடுப்பூசி ஏற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வரவேற்கின்றோம். அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். இப்பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும். இதன்மூலம் மக்களுக்கு பாதுகாப்பு கிட்டும். ஆனால் தடுப்பூசிமீது மட்டும் நம்பிக்கை வைத்து, மீண்டும் இயல்பு நிலைக்கு உடன் சென்றுவிடலாம் என நினைப்பது தவறாகும்.
கொழும்பு நகரசபை எல்லையில் 30 வீதம் டெல்டா தொற்று காணப்படுகின்றது. டெல்டா பரவும் வேகமும் அதிகம். எனவே, நாட்டை முழுமையாக திறந்து சுதந்திரமாக நடமாடினால் இரு வாரங்களுக்குள் நாடு முழுவதும் டெல்டா பரவும்.
நாட்டில் நூற்றுக்கு 8 வீதமானோருக்கே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 25 வீதமானோர் முதலாவது டோஸை பெற்றுள்ளனர். இரண்டாவது டோஸையும் பெற்று இரு வாரங்களுக்கு பின்னரே உரிய பாதுகாப்பு கிடைக்கும். எனவே, தடுப்பூசி துரிதப்பட்டுள்ளதால் தற்போது பாதுகாப்பு என்ற நிலைக்கு எவரும் வந்துவிடக்கூடாது.
முதியோர் மற்றும் நாட்பட்ட நோயினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் கட்டாயம் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும். 4ஆவது அலையில் இருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
திருமண நிகழ்வு, சினிமா உள்ளிட்ட விடயங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.” – என்றார்.