ஊடக சுதந்திரத்தை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை மீளப்பெறும் முடிவை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (6) உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு வலியுறுத்தினார்.
” 230 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான்கானால் கூட இதுபோன்ற சட்டமூலத்தைக் கொண்டு வர முடியவில்லை.
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் சார்ந்த நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறுவோம் எனக் கூறியதாலேயே இம்ரான் கானால் அதனை செய்ய முடியாமல்போனது.
நமது நாட்டிலுள்ள இவ்வாறான நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறினால் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்த செயலால் மக்களின் அடிப்படை உரிமை, ஜனநாயக உரிமை மற்றும் மனித உரிமைகள் என்பன மீறப்படுகின்றன. இது போன்ற சர்வாதிகார செயல்களுக்கு செல்லாது, சுதந்திரமாக தகவல்களைப் பெறும் வகையில் வலுவான சட்டமூலத்தைக் கொண்டு வர வேண்டும் என கோருகின்றேன்.” – என்றார்.










