“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். அதற்கான கால எல்லை மற்றும் வழிமுறைகள் தொடர்பில் கட்சி தலைவர்களால் இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.” – என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு
“ நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது இதில் பிரதான விடயமாகும். இதற்கான முன்னேற்பாடாக 21 ஆவது திருத்தச்சட்டம் இயற்றப்பட்டுவருகின்றது.
இரண்டாவது விடயம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான முயற்சியாகும். அதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் கட்சித் தலைவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. நிறைவேற்றதிகாரத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, பொருளாதார நெருக்கடியை தடுக்கும் வகையில் நாடாளுமன்றம் செயற்படவில்லை என்பதே இன்றைய பிரதான குற்றச்சாட்டு. நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும், நாடாளுமன்ற பணிகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது. “ – என்றார்.










