‘நிவாரணம்கோரி போராடிய தோட்டத் தொழிலாளர்கள் 12 பேர் கைது’

தமக்கு நிவாரணம் வழங்குமாறுகோரியும், தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் 12 பேர், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து வெலிஓயா தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டது. கடந்த 15 ஆம் திகதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், நெருக்கடியான சூழ்நிலையில்கூட தோட்ட நிர்வாகம் கெடுபிடிகளை மேற்கொள்கின்றது, தோட்டத்தை பூட்டி பொலிஸாரை ஈடுபடுத்தியுள்ளது என சுட்டிக்காட்டி , அத்தியாவசிய சேவைகளுக்கு வெளியில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

தனிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நோயாளிகளைக்கூட வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேற்படி போராட்டத்தின்போது, தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் சிலரை தொழிலாளர்கள் தோட்ட காரியாலயத்திற்குள் வைத்து பூட்டி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தோட்ட நிர்வாகம் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேபோல் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அனுமதியின்றி காரியாலயத்திற்குள் பிரவேசித்தமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை, ஊழியர்களை சிறை வைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்றைய தினம் அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles