“நீதிக்காக இதுவரை காலமும் போராடிக் கொண்டிருந்தோமே தவிர ஒரு இலட்சம் ரூபாவிற்காக போராடவில்லை”- ஜெனிற்றா

ஒரு இலட்சம் ரூபாயையும், சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நீதி அமைச்சரின் நடமாடும் சேவையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் என நாங்கள் கூறியிருந்தோம். இழப்பீடோ, மரணச்சான்றிதழோ தேவையில்லை என கூறியிருந்தோம்.

அப்படியிருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீது திடீரென ஏன் அக்கறை வருகின்றது. ஒரு இலட்சம் ரூபா நிதியினை எமது உறவுகளுக்கு வழங்கி அந்த நிதியில் வாழ்க்கை செலவைக் கட்டியெழுப்ப முடியுமா? இந்த நிதியில் எமது உறவுகள் வாழ முடியுமா? நீதிக்காக இதுவரை காலமும் போராடிக் கொண்டிருந்தோமே தவிர ஒரு இலட்சம் ரூபாவிற்காக போராடவில்லை.

யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களைக் கடந்தும் எமது உறவுகளைத் தான் தேடிக்கொண்டிருக்கின்றோம். உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கி உறவுகளைத் திருப்திப்படுத்துவதாக நீதி அமைச்சர் கூறியிருக்கின்றார். எமது உறவுகள் நிதிக்காகப் போராடவில்லை.

Related Articles

Latest Articles