நுவரெலியா மத்திய வங்கிக் கிளைக்குச் செல்லும் தொழிலாளர் எதிர்கொள்ளும் அசௌகரியம்

– டி.சந்ரு

நுவரெலியாவில் இயங்கும் மத்திய வங்கி கிளை காரியாலயத்தில் சேவையைப் பெறச் செல்லும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய தொழில் துறையினர் அசௌகரிகளை எதிர்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

குறித்த வங்கி காரியாலயத்தில் தங்களது ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் கணக்குகளை பெற்றுக்கொள்ள வேலை நாட்களில் நூற்றுக்கு அதிகமான ஒய்வு பெற்ற தொழிலாளர்கள் செல்கின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் நீண்ட வரிசையில் நின்றே சேவையை பெற்றுக்கொள்கின்றனரே தவிர இவர்கள் அமர்ந்து சேவையை பெற்றுக்கொள்ள வங்கியின் வளாகப்பகுதியில் இடம் இல்லாததால் பாரிய அசௌகரிகங்களுக்கு ஆளாகுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேநேரத்தில் வங்கி அமைந்துள்ள கட்டடப்பகுதி வளாகத்தில் பூக்கள் வளர்ப்பதற்கு தோட்டம் அமைத்து உள்ள நிலையில் அங்கு சேவையை பெற செல்லும் மக்களுக்கு கூடாரம் ஒன்றும் ,அமர்வதற்கு இடம் கூட இல்லாத நிலையில் வெய்யில் மற்றும் மழைக்காலங்களில் பிரதான வீதிவரை வரிசையில் நின்று சேவையை பெற்றுக்கொள்ளும் அவல நிலை தொடர்ச்சியாக இடம்பெறுவதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நுவரெலியா பிரதேச சபை, மாவட்ட செயலகம்,மற்றும் பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு பலமுறை கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும் சரி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்ட போதிலும் இதுவரை எந்தவோர் முன்னேற்றமும் இடம்பெறவில்லை.

அதேநேரத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தாம் நாட்டின் பொருளாதாரத்திற்காக உழைத்து கொடுத்து கடைசி காலத்தில் அவர்களுக்கென உள்ள சேவைக்கால பணத்தையும் பெற்றுக்கொள்ள மழையிலும் வெய்யிலிலும் காய்ந்து அவதியுறுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சேவையை பெறச் செல்வோருக்கு ஒரு அரச திணைக்களத்தில் இவ்வாறாக அவதியுறும் நிலையை மாற்றியமைக்க மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் மக்கள் விடுத்துள்ளனர்.

எனவே வங்கிக்குறிய வளாகப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து அங்கு அமர்வதற்கு இடங்களை வழங்கி நிம்மதியாகவும் முறையாகவும் வங்கி சேவையை பெற்று செல்ல சூழலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

அத்துடன் பூந்தோட்டம் வளர்ப்பதற்கு வழங்கும் மரியாதையும் அக்கறையும் உழைத்து ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மக்களுளுடைய கோரிக்கையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Paid Ad
Previous articleஹிசாலினக்கு நீதி கோரி பெண்கள், சிறுவர்கள் பொகவந்தலாவையில் கவனயீர்ப்பு போராட்டம்.
Next articleமாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பம்