பங்காளிக்கட்சிகளின் ஆதரவு மிக முக்கியம் – பிரதமர் மஹிந்த அறிவுரை

” நெருக்கடியான சூழ்நிலைகளில் எம்முடன் பயணித்தவர்கள், போராடியவர்கள் எம்முடனேயே இருக்க வேண்டும். பங்காளிகள் கைப்பாவைகள் அல்லர். கூட்டணி அரசில் ஐக்கியத்தை பாதுகாக்க வேண்டியது பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொறுப்பாகும்.”- என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சில கட்சிகள் சிறிய கட்சிகளாக இருக்கலாம், பெரிய கட்சிகளாக இருக்கலாம். அரசியலில் நோக்கம் என்பதே மிக முக்கியம். அவர்கள் எவரும் எமது துணையோ, ஊன்றுகோல்களோ, கைப்பாவைகளோ அல்ல.

அவர்கள் எம்முடன் இணைந்து ஒரு நோக்கத்திற்காக பயணிப்போர். ஐக்கியத்தை கை கூப்பி அழைப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் கிடைத்த பாரம்பரியம்.

கடினமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருந்த, ஒரு நோக்கத்திற்காக போராடிய எவரையும் கைவிட முடியாது. அரச அதிகாரம், அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் இவற்றில் செய்ய முடியாதவைகள் பல இருக்கின்றன.

ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பான பிரச்சினை முற்றியமைக்கும், விவசாயிகளில் ஆர்ப்பாட்டங்கள் இந்தளவுக்கு பாரதூரமாக நீண்டு சென்றுள்ளமைக்கும் அவர்கள் மத்தியில் வேலைகளை செய்யாததே காரணம்.

வாக்களித்த மக்கள் தற்போது மிகவும் சிரமமான, கஷ்டமான நிலைமையில் இருக்கின்றனர் என்பதை மறந்து விடக் கூடாது. ” – என்றார்.

Related Articles

Latest Articles