பசறை விபத்தின் எதிரொலி – 21 பஸ்களுக்கு சேவையில் ஈடுபட தடையுத்தரவு!

பதுளை – பசறை வழியில் பயணிக்கும் 21 பஸ்களுக்கு, பதுளை மோட்டார் வாகன திணைக்கள பிரதான பரிசோதகர் உபுல் ஹேரத் தற்காலிக தடையுத்தரவினை 30-03-2021ல் (இன்று) பிறப்பித்துள்ளார்.

பதுளை மோட்டார் வாகன திணைக்கள பரிசோதகர் குழுவினருடன், பதுளை, பசறை, போகாகும்பரை ஆகிய பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்துப் பிரிவு பொலிசாரும், மேற்படி சுற்றி வலைப்பு வாகன பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இப் பரிசோதனைகளின் போது, இ.போ.ச. பஸ்கள் – எட்டு, தனியார் பஸ்கள் – பதின்மூன்று என்ற வகையில் 21 பஸ்களுக்கு, வீதிகளில் பயணிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இப்பஸ்கள், வீதிகளில் பயணிக்க முடியாத வாகனங்களாகவே, காணப்பட்டன. பல்வேறு குறைபாடுகள் இப் பஸ்களில் காணப்பட்டன. இக் குறைபாடுகளினாலேயே, விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இக் குறைபாடுகளை பத்து தினங்களுக்குள் நிவர்த்தி செய்து, அப்பஸ்களை மீள் பரிசோதனைக்குற்படுத்திய பின், சேவையில் ஈடுபடுத்த அனுமதி வழங்குவது குறித்து அறிவிக்கப்படுமென்று, மோட்டார் வாகன திணைக்கள பிரதான பரிசோதகர் தெரிவித்தார்.

அத்துடன், பொதுமக்களிடமிருந்து, கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்தே, இத் திடீர் பரிசோதனைகள் பதுளை – பசறை பிரதான வழியில் மேற்கொள்ளப்பட்டன.

எம். செல்வராஜா, பதுளை நிருபர்

Related Articles

Latest Articles