ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை விமர்சித்துள்ள பிரதான எதிர்க்கட்சிகள், அதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும் என அறிவித்துள்ளன.
அத்துடன், அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சலுகைகள் மற்றும் நிவாரணத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை எனவும், நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் வகையிலேயே பட்ஜட் முன்மொழிவுகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியனவே மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளன.
வரவு – செலவுத் திட்டம்மீதான விவாதம் இன்று (17) நாடாளுமன்றம் நடைபெறவுள்ள நிலையில் அதன்போது பட்ஜட்டிலுள்ள குறைப்பாடுகள் புள்ளிவிபரரீதியாக சுட்டிக்காட்டப்படும் எனவும் குறித்த கட்சிகள் தெரிவித்தன. நடைமுறை சாத்தியமற்ற விடயங்கள்கூட முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் குற்றஞ்சாட்டின.