” எமது அணியில் உள்ள சிலரே இன்று என்னை விமர்சிக்கின்றனர். நான் மௌனம் காக்கின்றேன். எனக்கும் பதிலடி கொடுக்க தெரியும். என்னை விமர்சிப்பவர்களுக்கு, பதிலடி என்பது கடுமையாக கொடுக்கப்படும் என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன்.” – என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தின் மீது மட்டும் விரல் நீட்டாமல் இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டுமென தெரிவித்த அவர், இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியமென்றும் சபையில் தெரிவித்தார்.
இதற்காக கட்சி, இன, பிரதேச, வர்ண பேதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அவர் சபையில் அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
நாட்டில் தற்போது எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி நிலை ஆகியவற்றை மறுக்க முடியாது. இதற்கு எமது அரசாங்கம் மட்டும் காரணமல்ல. கடந்த அரசாங்கங்கள் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொண்ட பெருமளவிலான கடன்களும் இதற்கு அடிப்படைக் காரணமாகும்.
அதேபோன்று கடன்களை மீளச் செலுத்துவதற்கு மீண்டும் கடன் பெற்றுக் கொள்வது புதிதல்ல. இலங்கை மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலும் அதுவே நடைமுறையிலுள்ளன.
நஷ்டம் ஈட்டும் நிறுவனங்கள் முதலீடுகளுக்காக வழங்கப்படவேண்டும். மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் பொருத்தமில்லாத கொள்கைகளை கொண்டுள்ளன. எனினும் நாட்டுக்கு வருமானம் அவசியமாகும். அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், பல்வேறு கருத்துக்கள் சபையில் முன்வைக்கப்பட்டன. தற்போது அது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் அந்த அறிக்கை மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் அது தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
70 ஆயிரம் பக்கங்கள் அதில் காணப்படுகிறது. அதனை சுருக்கி ‘சொப்ட் கொப்பி’யாக அதனை தயாரிக்க வேண்டியது அவசியமாகும். அதன் பிரதியை நாம் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வழங்க முடியும். அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதனை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்










