பன்றி இறைச்சிக்காக கான்டபிள்ளைத் தாக்கிய D.I.G ! உயர் அதிகாரியைக் கைதுசெய்ய உத்தரவு!!

நுவரெலியா பொலிஸ் பங்களாவில் பன்றி இறைச்சி மோசடி குறித்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் குறித்த பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றியபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது குடும்பத்தாருடன் நுவரெலியா பொலிஸ் பங்களாவில் விடுமுறை கழிந்துவந்த குறித்த சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி, காட்டுப் பன்றி வேண்டுமெனக் கூறியுள்ளார். பங்களாவில் கடமையில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு காட்டுப் பன்றி வேண்டும் என்ற கூறியுள்ளார். பின்னர் உயர் அதிகாரியிடம் பணம் வாங்கிக் கொண்டு, காட்டுப் பன்றி கொள்வனவு செய்துவந்துள்ளார்.

பின்னர் சமைத்து, சாப்பிட தயாரான போது, இறைச்சி பகிரப்பட்ட பாத்திரத்தில், இறைச்சி குறைந்திருப்பதாக கூச்சலிட்ட உயர் பொலிஸ் அதிகாரி, கான்ஸ்டபிள் இதனை சாப்பிட்டுவிட்டதாக நினைத்து அவரைத் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உயர் அதிகாரியினால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு இதுகுறித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

அப்போது பொலிஸ்மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர, இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார். இதன்போது உயர் பொலிஸ் அதிகாரிக்கு எதிராக குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த ஆவணம் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து ஆராய்ந்துள்ள சட்டமா அதிபர், தற்போது பதவி உயர்வுபெற்று பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றும் குறித்த உயர் பொலிஸ் அதிகாரியை கைதுசெய்யுமாறு கடந்த 10ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஒரு தாக்குதல் சம்பவம் குறித்து சுமார் இரண்டு வருடங்கள் விசாரிக்கப்பட்டு தற்போதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பொலிஸ் துறை எவ்வளவு வேகமாக (ஆமை வேகத்தில்) இயங்குகிறது என்பதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

Paid Ad
Previous articleஅலாவுதீனின் அற்புத விளக்காக அமைச்சர் பஸிலின் ‘பட்ஜட்’ அமையும்!
Next articleசிவப்பு அபாய வலயத்திலிருந்து இலங்கை இன்னும் மீளவில்லை (காணொளி)