பஸிலின் டில்லி பயணத்தின் பிரதான நோக்கம் என்ன?

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனவும், பாரத பிரதமர் மோடி உள்ளிட்ட அரச உயர்மட்ட உறுப்பினர்களுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விரைவில் இந்தியா செல்கின்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட அரச உயர்மட்ட தலைவர்களுடன் இச்சந்திப்பின்போது பேச்சு நடத்துவார்.

கடன் வாங்குவதை மட்டும் பிரதான நோக்கமாகக்கொண்டு இப்பயணம் அமையவில்லை. கடன்களை மட்டுமே நம்பியிருப்பதும் எமது கொள்கை அல்ல. நாட்டுக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கு மாற்று வழிகள் உள்ளன. முதலீடு, சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகளை விஸ்தரித்தல் என்பவற்றின் ஊடாகவும் இதனை செய்யலாம். இவை தொடர்பிலான சந்திப்புகளை நடத்தவுமே நிதி அமைச்சர் டில்லி செல்கின்றார்.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கையிலுள்ள இந்திய தூதரகமும், டில்லியிலுள்ள இலங்கைத் தூதுரகமும் மேற்கொண்டுவருகின்றன. நிதி அமைச்சரின் டில்லி பயணத்தின்மூலம் இலங்கைக்கு சிறந்த பெறுபேறுகள் கிட்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles