பொலிஸ் அதிகாரிகளை மிரட்டி, அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து யுக்திய நடவடிக்கையை நிறுத்த முடியாது. பாதாள குழுக்களுக்கு முடிவுகட்டும்வரை அந்நடவடிக்கை தொடரும் என்று பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு முடிவுகட்டுவதற்குரிய யுக்திய நடவடிக்கையை கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பித்தோம். தற்போது 7 மாதங்கள் கடந்துள்ளன.
போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் பாதாள குழுக்களை நாம் களையெடுத்துவரும் நிலையில், குற்றவாளிகள் அஞ்சியுள்ளனர்.
எனவே, பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து அவர்களை முடக்கிவிடலாம் என எவரும் எடைபோடக்கூடாது. அவ்வாறு நினைத்தால் அது தவறாகவே அமையும்.
நாம் ஆரம்பித்துள்ள யுக்திய நடவடிக்கை தொடரும். போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு முடிவு கட்டும்வரை நடவடிக்கை இடம்பெறும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார் பொலிஸ்மா அதிபர்.
