‘பால் உற்பத்தி என்ற போர்வையில் தோட்ட காணிகளை சூறையாட முயற்சி’

பால் உற்பத்தி என்ற போர்வையில் எமது காணிகளை சூறையாட அரசாங்கம் எத்தணித்து வருகின்றது. இதற்கு பின்புலத்தில் சூட்சுமமான முறையில் அரசாங்கத்தில் இணைந்துள்ள மலையக கட்சிகளும் பச்சைக்கொடி காட்டி வருகின்றன. இத்தனை நாட்களும் எம் சமூகம் மாடாக தேய்ந்து காடாக கிடந்த நிலத்தை செழிப்பு நிறைந்த பகுதியாக மாற்றியுள்ள எம் நிலத்தை அரசாங்கம் பால் உற்பத்தி என்ற போர்வையில் தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்க இடமளிக்க கூடாதென மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் அ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

” எத்தனையோ ஆர்வமுள்ள இளைஞர்கள் கால்நடைளை வளர்க்க முயன்று கொண்டிருக்கின்றனர். கொரோனா கோர தாண்டவத்தால் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தத்தளித்து கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் கடனடிப்படையிலோ அல்லது வேறெதாவது வழியிலியோ பால் மாடுகளையோ அல்லது வேறு கால்நடைகளையோ வழங்கும் பட்சத்தில் எம் இளைஞர்களையின் பொருளாதாரமும் அதே நேரத்தில் பால் உற்பத்திகளையும் நாட்டில் அதிகரிக்க முடியும்.

நாட்டின் முதுகெழும்பாக விளங்கும் எம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை போல பால் உற்பத்தியிலும் பால் சார்ந்த பொருட்களின் தட்டுபாட்டை நீக்கும் முதுகெழும்பு சக்தியாகவும் எம் சமூகம் மாறும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.

அதை விடுத்து தனியாருக்கு நிலங்களையும் நிலம் சார்ந்த இயற்கை வளங்களையும் சேர்த்து தாரைவார்த்து கொடுக்க நினைக்கும் இவ் அரசாங்கத்தையும் அதற்கு துணை போகும் நம் சமூக அரசியல் பிரதிநிதிகளையும் மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

எத்தனையோ தொழிற்சாலைகள் மூடுவிழா கண்டுள்ளன. அவ்வாறான தொழிற்சாலைகளை இனங்கண்டு பால் உற்பத்திகளை வேலைத்திட்டங்களை ஆரம்பியுங்கள் அல்லது இதன் பொறுப்பை எம் இளைஞர்களிடம் ஒப்படையுங்கள் என மலையக மக்கள் முன்னணி பிரதி தலைவர் அ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles