பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (2021.03.19) காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகளினால் பிரதமர் வரவேற்கப்பட்டார்.
இரண்டு உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது பிரதமர், பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்து கொள்ளவுள்ளார்.
பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்ட ‘முஜிப் ஆண்டு’ தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் சிறப்பு உரையாற்றுவார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இவ்விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் கௌரவ ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
