பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார்.

தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே ‘தாமு அப்பா’ எனப் பிரபலமானார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக தனது 72ஆவது வயதில் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயா டிவி, ஸ்டார் விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் தொடங்கிய அவரது சமையல் பயணம், பின்னர் யூடியூப் தளத்திலும் தொடர்ந்தது. 2024ஆம் ஆண்டு கேட்டரிங் தொழில் ஒன்றையும் அவர் ஆரம்பித்து நடத்தி வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஏழாவது பருவத்திலும் அவர் நடுவராகப் பங்கேற்றிருந்தார்.

2025ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட செப் தாமு, 2010ஆம் ஆண்டு ‘தனிநபரின் மிக நீண்ட சமையல் மராத்தான்’ என்ற பிரிவில் கின்னஸ் உலக சாதனையையும் படைத்திருந்தார்.

கடந்த மாதம் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல்கள் பரவிய நிலையில், காணொளி ஒன்றின் மூலம் அவர் விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles