” பயங்கரவாதம் எப்போது உருவாகுமென ஜோதிடம்மூலம் கணித்துகூற முடியாது. பயங்கரவாதமென்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம். எந்த அரசாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.”
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளது. அந்நாட்டில் பயங்கரவாதம் உள்ளதாலா மேற்படி சட்டம் அமுலில் உள்ளது?
பயங்கரவாதம் எப்போது உருவாகுமான்பதை ஜோதிடர்களால் கணித்தகூறமுடியாது. பயங்கரவாதம் தேசிய பாதுகாப்பு மற்றும் மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலான விடயம். எனவே, அதனை ஒடுக்குவதற்கு – கட்டுப்படுத்துவதற்கு அரசு தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அத்தகையதொரு அரசு இருந்து பயன் இல்லை.
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எவரேனும் எதிர்ப்பெனில் எமக்கு இரு மாற்று வழிகள் உள்ளன. ஒன்று , தற்போதுள்ள சட்டம் சிறந்ததெனக்கூறி அதனை தக்கவைத்துக்கொள்ள முடியும். இரண்டாவதாக, சிறந்த யோசனை இருப்பின் அது தொடர்பில் எம்மிடம் கூறலாம். அது பற்றி பரிசீலிக்கலாம்.
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமையை மீறும் வகையில் உள்ளதெனில், யார் வேண்டுமானாலும் நீதிமன்றம் சென்று சுட்டிக்காட்டலாம். அதற்காக இரு வாரங்கள் உள்ளன. சட்டத்தரணிகள் உதவியை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.” – என்றார்.










