ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஆடை உற்பத்தித் துறையின் 2026ஆம் ஆண்டுக்கான சிறந்த வணிகத் தலைவருக்கான சர்வதேச விருதைப் பெற்ற மலையகத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி, இன்று (21) மாலை 4 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR654 விமானத்தின் மூலம் தாயகம் திரும்பிய அவரை வரவேற்பதற்காக குடும்பத்தினர் மற்றும் எவர்கிரீன் விளையாட்டுக் கழக நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்து உற்சாகமான வரவேற்பளித்தனர்.
மலையகத்தின் பூண்டுலோயா, ஹெரோ பெருந்தோட்டப் பகுதியில் பிறந்து வளர்ந்த ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி, தனது தொழில்முறைப் பயணத்தின் ஊடாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். அவரது இந்த சாதனை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மலையக மக்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் ஆப்பிரிக்கக் கண்டத்தின் டோகோ (Togo) நாட்டில் இயங்கி வரும் Star Garments Togo SARLU நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார்.
ஆடை உற்பத்தித் துறையில் அவர் ஆற்றிய தலைமைத்துவப் பங்களிப்பு மற்றும் தொழில்முறைச் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், 2026ஆம் ஆண்டுக்கான “OUTSTANDING BUSINESS LEADER OF THE YEAR (TEXTILE AND GARMENT MANUFACTURING) – 2026” என்ற சர்வதேச விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி, கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் அமைந்துள்ள Kempinski Hotel Gold Coast City ஹோட்டலில் நடைபெற்ற Africa Business Forum & Awards 2026 நிகழ்வில் இந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
“Shaping Africa’s Business Future: From a Single African Market to Global Competitiveness” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர், வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்திருந்தது.
டோகோ நாட்டில் இயங்கி வரும் Star Garments Togo SARLU நிறுவனம், ஆடை உற்பத்தித் துறையில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் மற்றும் உற்பத்திச் செயற்பாடுகள் மூலம் அந்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றது.
குறிப்பாக, இந்நிறுவனத்தின் தொழிற்சாலை நடவடிக்கைகள் மூலம் சுமார் 2,200 இளம் டோகோ நாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் பிறந்து வளர்ந்த அவர், தனது விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் தொழில்முறைத் திறமையின் மூலம் ஆப்பிரிக்கக் கண்டத்தில் சர்வதேச விருதைப் பெற்றுள்ளமை, மலையக இளைஞர்களுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் சாதனையாக அமைந்துள்ளது.
சர்வதேச விருதைப் பெற்றுக்கொண்டு தாயகம் திரும்பிய ராஜமாணிக்கம் சத்தியமூர்த்திக்கு குடும்பத்தினர், எவர்கிரீன் விளையாட்டுக் கழக நலன்புரிச் சங்கத்தினர், நண்பர்கள் மற்றும் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வரவேற்பளித்தனர்.










