பெருந்தோட்ட நிர்வாகத்தில் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் தலையீடு ஏன்?
இலங்கை இராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கின்றதா?
கேள்வி எழுப்புகின்றார் பா.உ இராதாகிருஸ்ணன்
– நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு
நுவரெலியா ஹல்கரனோயா மாகுடுகலை பெருந்தோட்ட நிர்வாகத்தில் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.இது எங்களுடைய மக்களுக்கு எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் உருவாக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று (07.03.2021) நுவரெலியா எல்பன் விருந்தகத்தில் நடைபெற்றது.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த இராதாகிருஸ்ணன்
என்றுமே இல்லாத வகையில் பெருந்தோட்ட நிர்வாகத்தில் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.இது பல சந்தேகங்களை எங்களுடைய மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது.எதிர்காலத்தில் எங்களுடைய மக்களை அடக்கு முறையில் நிர்வாகம் செய்வதற்கு கம்பனிகளும் அரசாங்கம் திரை மறைவில் செயற்பட்டு வருகின்றதா?
இன்று இலங்கையில் அனைத்து அரசாங்க தனியார் துறைகளிலும் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இணைக்கப்பட்டு வருகின்றார்கள்.இது அரசாங்கத்தின் திட்டமிட்;ட அடிப்படையில் நடைபெறுகின்றது.இதே நிலைமையை அரசாங்கத்தின் அணுசரனையுடன் கம்பனிகள் முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றதா?என்ற சந்தேகம் எங்குளுக்கு எழுகின்றது.
நுவரெலியா ஹல்கரனோயா மாகுடுகலை பெருந்தோட்ட நிர்வாகத்தில் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் 7 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.இன்று மலையகத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் பல இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.அவர்களுக்கு இந்த தோட்ட கம்பனிகள் வேலைவாய்ப்புகளை வழங்க முன்வருவதில்லை.அதற்கு காரணமாக அவர்கள் கூறுவது அனுபவம் இல்லை என்பதே அப்படியானால் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு பெருந்தோட்ட நிர்வாகத்தில் என்ன அனுபவம் இருக்கின்றது?
ஒரு பக்கத்தில் தோட்ட அதிகாரிகள் தங்களுக்கு பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும் என்று போராட்டம் செய்கின்றார்கள்.மறுபுறத்தில் தோட்ட நிர்வாகத்திற்கு ஒய்வு பெற்ற இராணுவத்தினர் இணைக்கப்படுகின்றனர்.
வுpடகிழக்கு பகுதிகளில் நடைபெற்ற ஜனநாயக போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பொலிசாரும் இரகசிய பொலிசாரும் அவர்களிடம் வாக்கு மூலம் பெற்று வருகின்றனர்.இப்படி இந்த நாட்டில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த அனைத்து விடயங்களையும் பார்க்கின்ற பொழுது இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே எங்களுக்கு தோன்றுகின்றது.இது ஒரு நல்ல விடயம் அல்ல.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.ஆனால் அரசாங்கமே அந்த ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வது சர்வதேசத்தில் எங்களுடைய நாட்டின் மீது பிழையான ஒரு பார்வையை கொண்டு வரும் எனவே இவ்வாறான விடயங்களை அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை பெருந்தோட்ட நிர்வாகத்தில் இணைத்து அரசாங்கத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்த கம்பனிகள் முயற்சிக்கின்றதா?