” உலக வங்கி நிதி உதவியுடன் அரசால் முன்னெடுக்கப்படவுள்ள ‘அஸ்வெசும’ நிவாரண வேலைத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களையும் உள்வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரையில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சரியான தரவுகள் திரட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்வைக்கின்றார்கள். எனவே இது தொடர்பில் அரசு முறையான கவனம் செலுத்த வேண்டும்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. உலக வங்கி அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். இதன்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராதாகிருஷ்ணன், உதயகுமார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், சமூக செயற்பாட்டாளர் கௌதமன் , தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் மு.பரணீதரன் ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.
இதன்போது பினவரும் விடயங்கள் உலக வங்கி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டன.
அரசாங்கம் உலக வங்கியின் நிதி உதவியுடன் செயற்படுத்தவுள்ள அஸ்வெசும எனும் நிவாரண வேலைத்திட்டத்தில் இதவரையில் சேகரிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான தகவல்கள் முறையாக சேகரிக்கப்படவில்லை. மேலும் ஒரு சில இடங்களில் இவற்றுக்காக தெரிவு செய்யபட்டுள்ளவர்கள் முழுமையாக தொழிற்சங்கத்தை முதன்மைபடுத்தியே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
மேலும் தகவல்களை சேகரிக்க சென்றவர்கள் அநேகமானவர்கள் எந்தவிதமான அனுபவமும் இல்லாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்கு பயனாளிகளை எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை தெரியாமல் இருக்கின்றார்கள்.
இந்த திட்டத்திற்கு உலக வங்கி நிதி உதவிகளை செய்கின்ற காரணத்தால் உலக வங்கி இது தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் கடந்த காலங்களில் பல நிவாரணங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றில் அநேகமானவை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை.
எனவே திட்டமிட்ட அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.எனவே அஸ்வெசும நிவாரண திட்டத்தில் பெருந்தோட்ட மக்கள் உள்வாங்கப்பட வேண்டியது.கட்டாயமாகும்.அவர்கள் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கடந்த பல வருடங்களாக உழைத்து வருகின்றார்கள்.
இந்த விடயத்தில் நிதி அமைச்சும் உலக வங்கியும் குறிப்பாக அரசாங்கமும் முறையான விதத்தில் பயனாளிகளை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுவரெலியா நிருபர் எஸ். தியாகு
