” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்பிற்கான காணிகளை பெற்றுக் கொடுக்காமல், வெறுமனே வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வதால் அந்த திட்டம் முழுமை பெற்றுவிட முடியாது. அப்படியானால் அவர்களுக்கு ஆகாயத்திலேயே வீடுகளை அமைக்க வேண்டும்.” என்று – நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவினால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்ட முன்மொழிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
மலையக மக்களுக்கு உரிய காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை ஏடுக்காமல் அவர்களின் வீட்டுத்திட்டத்திற்கு என்று நிதி ஒதுக்கீடு செய்வது அர்த்தமற்ற அந்த மக்களை ஏமாற்றுகின்ற ஒரு விடயமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.
இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூலமாக இந்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியில் எத்தனை வீடமைப்பு நிறைவு செய்யப்பட்டு அவை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது?
அதே நேரத்தில் வடகிழ்க்கு மாகாணங்களுக்கு இந்திய நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 50 ஆயிரம் வீடமைப்பு திட்டமானது பூர்த்திய செய்யப்பட்டு அந்த மக்களுக்கு அவை கையளிக்கப்பட்டுள்ளன.ஆனால் மலையக பகுதிகளில் அந்த நிலைமை இல்லை.
இதற்கு முக்கிய காரணம் எங்களுடைய வீடமைப்பு திட்டத்திற்காக காணிகளை ஒதுக்கீடு செய்வதில் அரசாங்கமும் தனியார் தோட்ட நிர்வாகங்களும் அக்கறை செலுத்துவதில்லை.அதற்கான ஒரு திட்டத்தை எந்த ஒரு அரசாங்கமும் நடைமுறைப்படுத்தவில்லை.பெருந்தோட்ட கம்பனிகளும் அதனை கண்டு கொள்விதில்லை.
எனவே, முதலாவதாக வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பு காணிகளை அடையாளம் கண்டு அதனை முறையாக சட்டரீதியாக பெருந்தோட்ட மக்களுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்த பின்புஅடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.
எனவே இந்த நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எவரும் பெருந்தோட்ட மக்களின் வீட்டு பிரச்சினை தெடர்பாக எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
எனவே வரவு செலவு திட்டத்தில் வெறுமனே இந்த மக்களை ஏமாற்றாமல் முறையாக காணிகளை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரும் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் மேலும் எமது மக்களும் வரவு செலவு திட்டத்தை பார்த்துவிட்டு பட்டாசு கொளுத்துவதை நிறுத்தி விட்டு இனியாவது நாம் ஒரு சிந்திக்க சமூகமாக மாற்றமடைவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.










