பேராதனையில் இஷாலியின் உடல் மீது இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த ஜுட் குமார் ஹிஷாலியின் உடல் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை, இன்று (31) நடத்தப்படவுள்ளது.

பேராதனை போதனா வைத்திசாலையில் இன்று பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மூன்று விசேட வைத்தியர் குழுவினால் இந்த பரிசோதனைகள் நடத்தப்படகிறது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய, நுவரெலியா நீதவானின் அனுமதியுடன் ஹிஷாலினியின் சடலம் நேற்று (30) தோண்டி எடுக்கப்பட்டது.

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டி எடுக்கப்பட்ட சடலம், பேராதனை போதனா வைத்தியசாலைக்கு நேற்று பிற்பகல் கொண்டு செல்லப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சடலம் மீதான இரண்டாம் கட்ட பிரேத பரிசோதனைகள் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சிறுமியின் உடலில் காணப்பட்ட காயங்கள் தொடர்பாகவும், சிறுமி ஏதேனும் வகையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாகவும் பிரேத பரிசோதனைகளில் ஆராயப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.

சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாக, முதலாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட அஜித் ரோஹண, அது எவ்வளவு காலம் என்பது குறித்தும் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சிறுமி உயிரிழப்பதற்கான சரியான காரணம் என்பன தொடர்பிலும் விசேட வைத்திய குழுவினர் பரிசோதனைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

 

Paid Ad
Previous articleரிஷாட் பதியூதீன் (எம்.பி.) என்பவரைப் பூஜிக்கும் ஆதரவாளர்களுக்கு ஒரு பகிரங்க மடல்!
Next articleமலையகத்தின் வளம்! நீல இரத்தினக்கல் கொத்து!