நுவரெலியா மாவட்டம், டயகம மேற்கு 3 ஆம் பிரிவில் அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா, நேற்று (ஏப்ரல் 29) புதன்கிழமை காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கர்மாரம்ப நிகழ்வுகளுடன் விழா ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 28ஆம் திகதி காலை 7.00 மணி முதல் ஆலயத்தில் விசேட எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
நேற்று காலை 9.01 மணி முதல் 10.10 மணி வரையிலான சுப வேளையில், யாக பூஜை மற்றும் கும்ப பூஜைகள் நிறைவுற்று, மங்கல மேளதாளங்கள் முழங்க கும்பங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
பக்தர்களின் “அரோகரா” கோஷங்களுக்கு மத்தியில், முதலில் வழிப்பிள்ளையாருக்கும், அதனைத் தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும், மூலஸ்தான முத்துமாரியம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
இந்தக் கும்பாபிஷேக சமயக் கிரியைகளை, இலங்கையின் புகழ்பெற்ற பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ இ. ஜெயவிருபாட்ஷன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மற்றும் குருக்கள் பக்திபூர்வமாக நிறைவேற்றினர்.
இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளாசியைப் பெற்றனர். விழா நிறைவில் கலந்துகொண்ட அனைவருக்கும் விபூதிப் பிரசாதம் மற்றும் அன்னதானம் என்பன வழங்கப்பட்டன.
https://www.facebook.com/share/p/18oSrD6n2i/
