ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் திங்கட்கிழமை (06) தெஹ்ரான் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான ஈரானிய மக்கள் திரண்டு தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.
கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வரும் இந்த இரங்கல் நிகழ்வுகளிலேயே, இன்றைய தினமே மிகப்பெரிய மக்கள் கூட்டத்தைக் கண்ட நாளாக மாறியுள்ளதுடன், ஈரானிய மதத் தலைவர்களின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதையும் இது நிரூபித்துள்ளது.
மத்திய தெஹ்ரானின் பிரதான வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததை அரசுத் தொலைக்காட்சியின் ட்ரோன் (Drone) காட்சிகள் காட்டின.
கொல்லப்பட்ட கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் நால்வரின் உடல்கள் அடங்கிய பெட்டிகள் ஒரு பெரிய லாரியில் ஏற்றப்பட்டு வீதிகள் வழியே கொண்டு செல்லப்பட்டன. வெயிலின் தாக்கத்தைக் குறைக்க மக்கள் மீது தீயணைப்புக் குழாய்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
இறுதி ஊர்வலம் ஒரு பாலத்தின் கீழ் கடந்து சென்றபோது, அங்கு தொங்கவிடப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விளம்பரப் பலகை (Billboard) மீது துயரத்தில் இருந்த மக்கள் கற்களை வீசி எறிந்தனர்.
அந்தப் பலகையில் டிரம்பின் தலையைக் குறிவைத்து துப்பாக்கிக் குண்டு பாய்வது போன்ற படம் வரையப்பட்டு, “அமெரிக்கா எங்களது தந்தையைக் கொன்றுவிட்டது. உங்களை நாங்கள் சும்மா விடமாட்டோம்!” என்று எழுதப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கொடிகளைத் தீயிட்டுக் கொளுத்திய வேளையில், கறுப்பு சாடோர் (Chadors) அணிந்த பெண்கள், ஆங்கிலத்தில் “KILL TRUMP” (டிரம்பைக் கொல்லுங்கள்) என்று எழுதப்பட்ட சிவப்பு நிறப் பலகைகளை ஏந்தியிருந்தனர்.
மேலும் சிலர், டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் முகங்கள் துப்பாக்கிக் குறியின் (Crosshairs) நடுவே இருப்பது போன்ற போஸ்டர்களை ஏந்தியிருந்தனர். அதில், “இங்கு இரத்தம் சிந்தப்படும்” (There will be blood) என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை அன்று, கொல்லப்பட்ட கமேனியின் மூன்று மகன்கள் தெஹ்ரானின் மாபெரும் பிரார்த்தனை மண்டபத்தில் அவரது உடலுக்கு அருகில் பிரார்த்தனை செய்தனர். ஆனால், தந்தைக்குப் பிறகு ஈரானின் அடுத்த ஆன்மீகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அவரது மகன் மொஜ்தாபா கமேனி (Mojtaba Khamenei) இந்த ஊர்வலத்தில் தோன்றவில்லை. தந்தையைக் கொன்ற அதே தாக்குதலில் படுகாயமடைந்ததால் அவரது முகம் சிதைந்துவிட்டதாகக் நம்பப்படுகிறது. இதனால், பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து அவர் இன்னும் பொதுவெளியில் தோன்றவில்லை.
கடந்த மாதம் எட்டப்பட்ட முதற்கட்ட அமைதி உடன்படிக்கையுடன் இந்தப் போர் முடிவுக்கு வந்துள்ளது. இந்த உடன்படிக்கை ஈரானின் மதத் தலைவர்களின் ஆட்சியைத் தக்கவைத்துள்ளதுடன், ஹார்முஸ் நீரிணை வழியிலான உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் புதிய பலத்தையும் ஈரானுக்கு வழங்கியுள்ளது. இதனால் ஈரான் இதனைத் தங்களின் வெற்றியாகக் கருதுகிறது.
மறுபுறம், டிரம்ப்பும் இந்தப்போரில் தனக்குத் தான் வெற்றி என்று கூறிக்கொள்கிறார். எனினும், ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்களை அழிப்பது, அதன் அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களைத் தடுப்பது மற்றும் ஈரானிய மக்கள் தங்கள் தலைவர்களை வீழ்த்துவதற்கான சூழலை உருவாக்குவது போன்ற டிரம்பின் ஆரம்பகால நோக்கங்கள் இன்னும் நிறைவேறவில்லை.
இஸ்ரேலை அழிப்பதற்கான திட்டத்தை வழிநடத்தியதாலேயே மூத்த கமேனி கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், “இஸ்ரேலை அழிக்க மீண்டும் எந்தவொரு ஈரானியத் தலைவர் முயன்றாலும், அவர்களும் இதேபோல் கொல்லப்படுவார்கள்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
