மலையக மக்கள் பாதுகாப்புடனும் கெளரவமாகவும் வாழ்வதற்கு ஏற்ற வீடுகளை அமைக்க 20 பேர்ச் காணியும் நாட்டில் நடைமுறையில் உள்ள காணி சட்டத்தைப் பின்பற்றி அவற்றிற்கு காணி உறுதிகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவர் டி.கணேசலிங்கம் வலியுறுத்தினார்.
பசறை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேசிய காணி தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்;
” கடந்த வருட இறுதியில் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மலையகத்தை குறிப்பாக பதுளை மாவட்டத்தின் தோட்டப்புறங்களை புரட்டிப் போட்டுள்ளது.
டித்வா புயலினால் வீடுகளை இழந்த சொந்த காணிகளை உடைய மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் இன்னும் நிவாரணம் சென்றடையவில்லை.
அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலேயே உள்ளனர்.
இவை குறித்து ஆராய்ந்து பார்க்கும் போது மலையகத்தில் 203 வருடங்களாக எம்மக்களுக்கு காணி உரிமை இல்லாததன் காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளதை அறிய முடிந்தது.
அத்தோடு பாதுகாப்பான காணிகளை வீடமைப்பிற்காக விடுவிப்பதில் தோட்ட கம்பனி நிர்வாகங்கள் இழுத்தடிப்புகளை மேற்கொள்கின்றன.
இதற்கு தீர்வாக நாம் அரசாங்கத்துடன் கலந்துரையாடி ஒற்றுமையாக செயற்பட்டால் மட்டுமே எம்மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
இன்றைய தேசிய காணி தினத்தில் இலங்கையில் நிலமற்ற அனைத்து சமூகத்தினருக்கும் நிலவுரிமையை உறுதி செய்தல், டித்வா புயலில் வீடுகளை இழந்த மக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக் கொடுக்க வலிறுத்துதல், மக்கள் நீண்ட காலம் பயன்படுத்திய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்குவதை தடைசெய்து மக்களின் வாழ்விற்கும் ,
வாழ்வாதாரத்திற்கும் ஏற்ற இடமாக வழங்கி காணி உரிமையை உறுதி செய்தல், இந்திய நாட்டின் உதவியில் அமைக்கப்படும் வீட்டுத் திட்டத்தினை துரிதப்படுத்தி பயனாளிகளுக்கு வழங்குவதுடன் காணி உறுதியையும் வழங்கல், தித்வா அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கும், சிவப்பு அனர்த்த எச்சரிக்கையுடன் வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கும் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்தல், அரசாங்கம் முன்வைத்த அட்டன் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தி எம்மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தல் உட்பட 13 கோரிக்கைகளை இன்றைய தினம் நாம் பிரகடனமாக முன்மொழிந்து நாட்டின் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க உள்ளோம் என்றார்.
இக்கூட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர் பெ.முத்துலிங்கம், நடேசன் சுரேஷ், ஜீவரட்ணம் சுரேஷ் எனப் பலரும் கலந்து கொண்டு காணி உரிமை தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சட்ட ரீதியாக அணுகும் வழிமுறைகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.
ஊவா , மத்திய மாகாணங்களில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தேசிய காணி தினத்தை முன்னிட்டு பசளை நகரில் விழிப்புணர்வு பேரணி ஒன்றும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பசறை நிருபர்.
