ஈரானின் கதையை முடிப்பது எமக்கு பெரிய விடயம் அல்ல

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும், இல்லையெனில் “அந்நாட்டின் கதையை முடிப்போம்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நடைபெற்றுவரும் சூழ்நிலையில், அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் சவாலான போக்கை வெளிப்படுத்தி வரும் நிலையில் டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுடன் தொடங்கிய இந்த மோதலைத் தொடர்ந்து, இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்காக 60 நாட்கள் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

எனினும், கடந்த வாரம் நடைபெற்ற அமெரிக்கா – ஈரான் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி நிறைவடைந்தன.

இது குறித்து ஓவல் அலுவலகத்தில் (Oval Office) செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,

“நாங்கள் ஒன்று ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொள்வோம், இல்லையெனில் எங்களது வேலையை முழுமையாக முடிப்போம் (Finish the job). அவர்களின் கதையை முடிப்பது எங்களுக்கு ஒன்றும் கடினமான காரியம் அல்ல.

ஆனால், நான் ஒப்பந்தம் செய்வதையே விரும்புகிறேன்; ஏனெனில் 9.1 கோடி (91 மில்லியன்) மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.”

அவர் மேலும் கூறுகையில், “ஒரே மணி நேரத்தில் அவர்களின் பாலங்களை எங்களால் தகர்க்க முடியும், அவர்களின் எரிசக்தி விநியோகத்தை முடக்க முடியும். அவர்களிடம் தற்போது பணம் எதுவும் இல்லை. நாங்கள் அவர்களுக்குப் பணம் எதுவும் கொடுக்கவில்லை” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரான் பலவீனமடைந்துள்ளது என்ற மேற்கத்திய நாடுகளின் கணிப்பைக் பொய்யாக்கும் வகையில், வாரயிறுதியில் நடைபெற்ற கமேனியின் இறுதிச்சடங்கில் ஈரானிய மக்கள் மிகவும் சவாலான, ஒன்றுபட்ட மற்றும் தங்களின் அடுத்தகட்ட நகர்வை தாங்களே தீர்மானிக்கும் உறுதியுடன் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்தே டிரம்ப் இந்த அதிரடித் தனமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்வதற்காகவே வாஷிங்டன் இந்த 60 நாள் போர்நிறுத்தத்தைக் கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles