பொதுநலவாயப் போட்டிகளில் தங்கம் வென்ற தரங்கவுக்கு பதவி உயர்வு! 

பொதுநலவாய (காமன்வெல்த்) விளையாட்டுப் போட்டிகளின் ஈட்டி எறிதல் போட்டியில், உலக சாம்பியன்களைத் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ரொமேஷ் தரங்கவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தாய்நாட்டுக்குப் பெருமையைக் கொண்டுவந்த அவரது இணையற்ற திறமையையும் முந்தைய சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவினால், அவர் கோப்ரல் பதவி நிலையிலிருந்து சார்ஜன்ட் பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார். அத்துடன், விமானப்படைத் தளபதியால் ரொமேஷ் தரங்கவுக்குச் விசேட நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனைக்குப் பின்னால் உறுதுணையாக இருந்த அவரது பயிற்சியாளர் டோனி பிரசன்னா மற்றும் உடற்பயிற்சி உதவியாளர் கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோரின் சேவைகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தச் சிறப்பு மரியாதை மற்றும் பாராட்டு நிகழ்வு இன்று விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

Related Articles

Latest Articles