போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றாக அழிக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அதேவேளையில், ஐக்கிய நாடுகள் சபையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் விரைவில் உடன்பாடு எட்டப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப்,
” நான் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஈரானை மீண்டும் கட்டியெழுப்பவும், அது முன்னெப்போதையும் விடப் பெரிய நாடாக உருவெடுக்கவும் வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதா? அல்லது இஸ்லாமியக் குடியரசான ஈரானை விரைவாக அழித்து, பிற நாடுகளையும் மக்களையும் மீண்டும் கொல்லவோ அழிக்கவோ அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பதா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
டிரம்பின் இந்த உரையைக் “வெறும் பிரச்சாரம்” என நிராகரித்துள்ள ஈரானிய ஆயுதப் படைகள், “அக்கிரமக்காரர்கள் மீது கடுமையான, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மற்றும் கணிக்க முடியாத அளவுக்குத் தாக்குதல் நடத்தத் முழு தயார் நிலையுடன் இருப்பதே” இதற்கான பதில் எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளன.
இவ்வாறான காட்டமான கருத்துகளுக்கு மத்தியிலும், அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களுடன் தொடங்கி, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டு, எண்ணெய் விலையை உயர்த்திய சுமார் ஏழு மாத கால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே, கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி சந்தத்துப் பேசியுள்ளார்.
அமெரிக்கா தனது ராணுவ அழுத்தத்தைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்துவிடத் தயார் என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
