“ முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டை பொறுப்பேற்றேன். அதன் ஊடாக நரகத்தில் விழுந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.” – என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் மீட்சித் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் விளைவாக 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பொருளாதார முன்னேற்றத்திற்கான பயணம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் மூன்று சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம். பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் இதற்கு நிகரான எதிர்வுகூறல்களை முன்வைத்துள்ளன.
தற்போது, நாட்டின் பணவீக்கம் 1.5 வீதம்வரை வீழ்ச்சியடைந்துள்ளதோடு பல ஆண்டுகளாக பற்றாக்குறையில் இருந்த முதன்மைக் கணக்கின் இருப்பு, 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத உபரியாக மாற்ற முடிந்தது. பல தசாப்தங்களுக்குப் பின்னர், 2023 ஆம் ஆண்டில் கொடுப்பனவுகளின் நடப்புக் கணக்கு உபரியாக உள்ளது. வட்டி விகிதம் 10வீதம் – 13வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 300 ரூபாவை விட குறைக்க முடிந்ததோடு, அந்நிய செலாவணி கையிருப்பு 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, சவாலான, கடினமான ஆனால் சரியான பாதையில் பயணிப்பதால் இந்த நிலையை அடைய முடிந்தது.
2032 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்தக் கடன் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95 வீதமாகக் குறைத்து, அரசாங்கத்தின் மொத்த நிதித் தேவையை வருடாந்தம் 13 வீதமாகக் கொண்டு வருவதும், வெளிநாட்டுக் கடன் சேவையை வருடாந்தம் 4.5 வீத்தைவிட அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதும் கடன் மறுசீரமைப்பின் இறுதி இலக்கு .
கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை.
பொருளாதார மறுமலர்ச்சி வேலைத் திட்டத்தின் பெறுபேறுகள் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடந்த இரண்டு வருட காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அஸ்வெசும திட்டம் மற்றும் நிவாரணத் திட்டங்களின் கீழ் நாட்டின் வறிய மக்களுக்கு பெருமளவிலான பணத்தை நேரடியாக வழங்குவதாகவும், சிறுநீரக நோயாளிகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு 2024 ஏப்ரல் முதல் 50 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி நிவாரணத்தை விட மூன்று மடங்கிற்கும் அதிகமான தொகை வறிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்த நிவாரணத் திட்டங்களுக்காக 205 பில்லியன் ரூபா செலவிடப்படும் , இதற்கு முன்னர் இந்தளவு பாரிய தொகை வறிய மக்களுக்காக ஒதுக்கப்படவில்லை.
ரூபா வலுப்பெற்றதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கமைய எரிவாயு, எரிபொருள், பால் மா ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளன. வட்டி வீதம் குறைந்தமையால் தொழில் முனைவோருக்கு அதிக வசதி, வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
பொருளாதார நெருக்கடியின் மத்தியில், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை மீட்கும் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக பாரிய முதலீடு மேற்கொள்ள அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தப் பணிகளை ஒருங்கிணைக்க திறைசேரியில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தொடர்பான விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
