போர்க்களமானது ரம்புக்கனை! ஒருவர் பலி – 11 பேர் காயம்!! நடந்தது என்ன?

ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மோதல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மார்க்கத்துக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பித்தன. எரிபொருள் பவுசர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தினர்.

போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். எனினும், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்லவில்லை. இதனையடுத்து நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதிலுக்கு போராட்டக்காரர்களும் கல்வீச்சு தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரம்புக்கனை பகுதி போர்க்களமாக மாறியது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்த 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்ட காயத்தால்தான் பலியாகியுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

” போராட்டக் காரர்களால் ஆட்டோவொன்று கொளுத்தப்பட்டுள்ளது. சொத்துகளுக்கும் தேசம் விளைவிக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் பொலிஸார்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பொலிஸாரும் காயமடைந்துள்ளனர். ” – என்றார்.

ரம்புக்கனை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles