‘ மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது’

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் நிலையில் நாட்டு மக்களின் பூரண ஒத்துழைப்பு மூலம் மட்டுமே நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மக்கள் சமூக இடைவெளியை அலட்சியப்படுத்தி நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக மாறலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நாளுக்கு நாள் வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வரும் நிலையில் இந்த நிலை தொடர்ந்தால் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ள அவர், தெரிவு செய்யப்பட்ட பகுதிகளிலேயே ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுமக்களின் நடமாட்டத்திற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் திருமணங்கள், சமய நிகழ்வுகள் மற்றும் மரணச் சடங்குகள் மூலமே இம்முறை கொரோனா வைரஸ் பெருமளவு பரவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் நாட்டில் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை நேற்றைய தினம் மேலும் 263 பேர் புதிதாக வைரஸ் தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் இதுவரை மொத்தம் 7784 வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Paid Ad