ஐக்கிய மக்கள் சக்தி என்பது இனவாதக் கட்சி அல்ல என்றும், அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்குவதே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
“ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஒருபோதும் இனவாதக் கட்சி கிடையாது. சிறுபான்மை இனத்திற்கோ அல்லது பெரும்பான்மை இனத்திற்கோ இங்கு விசேட சலுகை எதுவும் கிடையாது. அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை என்பதே எமது முதன்மையான கொள்கையாகும்.
சிறுபான்மையினத்தவர்கள் மத்தியிலும், பெரும்பான்மையினத்தவர்கள் மத்தியிலும் சில அடிப்படைவாதிகள் இருக்கலாம். அந்த அடிப்படைவாதிகளைப் பற்றியே லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டிருக்கக்கூடும். நாளை (இன்று) அவர் இங்கு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவார். அப்போது அவரிடம் இது குறித்து விரிவாகக் கேள்விகளை எழுப்பலாம்.
ஞானசார தேரரின் துறவற ஆடை அகற்றப்பட்டமை தொடர்பில் டயஸ்போராக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கலாம். சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் உள்ள சில அடிப்படைவாதிகளும் மகிழ்ச்சியடைந்திருக்கலாம். நான் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை; அந்த இனங்களில் உள்ள சில அடிப்படைவாதிகளைப் பற்றியே குறிப்பிடுகின்றேன்” என்று நளின் பண்டார கூறினார்.










