எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பட்டினி என்பது பாகுபாடற்றது எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்களின் சுமையைக் குறைத்து அடுத்த தலைமுறைக்கு வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமாறு இலங்கையிலுள்ள அனைத்துப் பெண்களிடமும் கேட்டுக் கொண்டார்.
அன்று உணவு வழங்க முடியாமல், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் இந்நாட்டு தாய்மார்கள் அனுபவித்த துன்பங்களை யாரும் மறந்துவிடக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி, இன்று மேடைகளில் தேசப்பற்றையும், மக்களின் துன்பங்களையும் பேசும் தலைவர்கள் சவாலுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடியதை இந்த நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
“பெண்கள் எமது பலம்” எனும் தொனிப்பொருளில் இன்று (09) கொழும்பு இலங்கை கண்காட்சி மற்றும் மண்டபத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். கட்சி வேறுபாடின்றி நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான பெண்கள் அமைப்புக்கள் மற்றும் கட்சி கிளைச் சங்கங்களின் தலைவிகள் மற்றும் பிரதிநிதிகள் பெருமளவானோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மீண்டு வரும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உறுதிமொழி வழங்கினர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நெருக்கடியான பொருளாதார நிலைமைகள் இருந்த போதிலும், இந்நாட்டுப் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதை தாம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை என்று தெரிவித்தார். பெண்கள் வலுவூட்டல் சட்டத்திற்கு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதற்கான சட்டக் கட்டமைப்பை அமைப்பது உட்பட பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நான் ஏன் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடுகிறேன் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். பசி கட்சி சார்பற்றது. எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பசி உணரப்படுகின்றது. வயிற்றைப் பட்டினி இன்றி நிரப்புதல் நடுநிலையானது.
எனவே, அரசியல் கட்சி நிற பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டு மக்களின் வயிற்றை நிரப்ப ஒன்றிணைய வேண்டும். இந்நாட்டு மக்கள் படும் துன்பங்களை நான் நன்கு புரிந்து கொண்டுள்ளேன். மின்சாரம் இல்லாமல், எரிபொருள் இல்லாமல், உணவு இல்லாமல், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் நீங்கள் அனைவரும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டீர்கள். நாம் மீண்டும் இந்த துன்பத்தை சந்திக்க வேண்டுமா? அந்த நிலைமை ஏற்படாமல் தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
ஏனையவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்காமல் ஓடியதால்தான் நான் ஜனாதிபதியானேன். நான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சஜித் பிரேமதாச மற்றும் அநுர திஸாநாயக்க ஆகியோரிடம் “இந்த சிரமங்களிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம்” என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற அவர்கள் எங்களை ஆதரிக்கவில்லை.
அதன்போது, எனக்கு மூன்று பெண்கள் ஆதரவு வழங்கினர். இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம், அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெலன், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஆகிய 3 பெண்கள்.
தேசப்பற்று குறித்து பேசுபவர்கள், மக்கள் படும் துன்பங்கள் தமக்குத் தெரியும் என்று கூறியவர்கள் அன்று ஓடினார்கள். வெளிநாடுகளைச் சேர்ந்த மூன்று பெண்கள் நாட்டை முன்னேற்ற உதவினார்கள். இந்த மூவரின் உதவி இல்லாவிட்டால் இன்று நாம் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது.
இந்நாட்டில் உரம் இல்லாத போது அமெரிக்காவைச் சேர்ந்த சமந்தா பவர் எங்களுக்கு ஆதரவளித்தார். அந்த உரத்தை வழங்கியதன் காரணமாக அந்த சிறு போகத்தில் வெற்றி பெற்று பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு வர முடிந்தது. எனவே அந்தப் பெண்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்.
சிறந்த தேசபக்தர்கள், அனுபவம் வாய்ந்த தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் எவரும் இந்த நாட்டின் பொறுப்பை ஏற்கவில்லை. மிகவும் சிரமப்பட்டு ஒரு நாடாக முன்னோக்கி வந்தோம். நாம் மேலும் செல்ல வேண்டும். நாம் அனைவரும் பட்ட துன்பங்களைச் கூறத் தேவையில்லை.
உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிடுகிறேன். 2021 ஆம் ஆண்டில், வணிக வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்கப் பொருட்களின் மதிப்பு 250 பில்லியன் ரூபா. இன்று அது 500 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது. எனவே, அது தொடர்பில் நாம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தோம். சில வீடுகளில் பெரியவர்கள் ஒரு வேளை உணவைத் தவிர்த்து விடுவார்கள். மற்றொரு பிரிவினர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க முடியாமல் தவித்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நான் ஆதரவைக் கோரியபோது வழங்கிய உதவியினால் இன்று இந்த நிவாரணங்களை நாங்கள் பெற்றுள்ளோம். ஜெனட் யெலன் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எங்களுக்கு ஆதரவளித்தனர். இன்று நாங்கள் வலுவாக முன்னேர முடிந்தது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் எங்களுக்கு கடன் வழங்கும் பல நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளோம். நாங்கள் அதன்போது இணங்கிய நிபந்தனைகளை பொருளாதார பரிமாற்றச் சட்டத்தில் சேர்த்துள்ளேன். இந்தப் பாதையில் நாம் தொடர்ந்தால், ஒரு நாடாக நாம் மீண்டு வரக்கூடிய திறன் உள்ளது.
ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் திருத்தப்படும் என சிலர் கூறுகின்றனர். நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என பகிரங்கமாக அறிவித்துவிட்டு தப்பி ஓடியவர்கள் இன்று பெண்களின் ஆதரவுகளால் கிடைத்த இந்த நிவாரணத்தை அகற்றுவோம் என கூறுகிறார்கள்.
நாங்கள் அனைவரும் மிகவும் சிரமப்பட்டு இந்தப் பயணத்தை வந்துள்ளோம். எனவே, இந்த நிவாரணத்தை இழப்பதா அல்லது பாதுகாப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதன்போது, முகத்தையோ பெயரையோ பார்க்காமல் தான் மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டும், நீங்கள் அந்த முடிவை எடுக்க வேண்டும்.
இந்த கடினமான பயணத்திலும் இந்த நாட்டு பெண்களை நான் மறக்கவில்லை. அஸ்வெசும, உறுமய, குறைந்த வருமானம் கொண்டவர்கள் வசிக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு உரிமை வழங்குதல், மலையகத்தில் கிராமங்கள் அமைக்கும் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் போன்ற வேலைத்திட்டங்களை செயல்படுத்தி நிவாணரங்கள் வழங்கப்பட்டன. அதேபோன்று, பெண்களை வலுவூட்டவும் நாம் நடவடிக்கை எடுத்தோம்.
அதற்காக பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். 20-30 வருடங்களாக இந்த நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைக்கான போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. இப்போது அவற்றைப் பேசித் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும். இப்படி சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதேவேளையில் இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பெண்களுக்கு சம உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றோம்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைத்து பெண்களுக்கும் இந்த உரிமைகளை வழங்குவதற்கான முதல் சட்டத்தை இப்போது கொண்டு வந்துள்ளோம். மேலும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்க சட்டம் கொண்டு வரப்படுகிறது. மேலும் இந்நாட்டில் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு இன்னும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதைக் கூற வேண்டும்.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கிராம மட்டத்தில் உள்ள முக்கிய பெண்கள் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அடுத்த வருடம் ஒரு மாபெரும் மாநாட்டைக் கூட்டவுள்ளோம்.
நாம் அனைவரும் ஒரு நல்ல நாட்டை விரும்புகிறோம். உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த நாடு தேவை. அதற்கு முன் நம் வீடுகளில் உள்ள வாழ்க்கைச் சுமையைக் களைந்து முன்னேறுவோம். நாட்டை அபிவிருத்தி செய்வோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.