மனைவியின் துன்புறுத்தல் தாங்காமல், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹூப்ளி சாமுண்டீஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பெட்டரு கோலப்பள்ளி(40). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன முதல் 3 மாதங்களில் எவ்வித பிரச்னையும் இன்றி தம்பதியின் வாழ்க்கை நகர்ந்ததாக தெரிகிறது.
சிறிதுகாலம் முன்பு பெட்டரு கோலப்பள்ளியின் வேலை பறிபோனது. வேலை இல்லாத நிலையில் அவருக்கும், மனைவிக்கும் இடையே கடும் பிரச்னை எழுந்ததாக தெரிகிறது. விவாகரத்து கேட்டு, மனைவி வழக்கு தொடர்ந்து உள்ளதோடு, ரூ.20 லட்சம் தருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பெட்டரு கோலப்பள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அவரின் சகோதரர் ஏசையா, தூக்கிய தொங்கிய நிலையில் இருந்த சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தற்கொலைக்கு முன்பு பெட்டரு கோலப்பள்ளி எழுதிய கடிதம் ஒன்றையும் சகோதரர் கண்டெடுத்துள்ளார். அதில், அப்பா என்னை மன்னித்துவிடுங்கள், அவள்(மனைவி) என்னை கொல்கிறாள், எனது மரணத்தை விரும்புகிறாள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
சகோதரர் அளித்த புகாரில் சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எழுதியதாக சகோதரர் வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் தகவல் தொழில்நுட்ப பொறியாளர் ஒருவர் சமீபத்தில், மனைவி சித்ரவதை செய்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதே போன்று சம்பவம் நடந்துள்ளது.