மலர்கிறது தேசிய அரசு: ராஜிதவுக்கு அமைச்சு பதவி?

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதி நடைபெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த வாரம் முதல் தெற்கு அரசியல் களத்தில் தரமான – சிறப்பான சம்பவங்கள் அரங்கேறும் என அறியமுடிகின்றது.

ஏட்டிக்கு போட்டியாக கட்சி தாவல்களும் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசமீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து புதிய கூட்டணியில் இணைய திட்டமிட்டுள்ளார். ராஜித சேனாரத்னவும் ரணில் பக்கம் ‘பல்டி’ அடிக்கவுள்ளார்.

இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற அறிவிப்பு எதிர்வரும் 27 அல்லது 28 ஆம் திகதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், அதன்பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரையாற்ற திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இந்த உரையின்மூலம் எதிரணி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பாரெனவும், அந்த அழைப்பையேற்றே ராஜித, பொன்சேகா மற்றும் மேலும் சில எம்.பிக்கள் ரணிலுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள் எனவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (நாட்டின் நலன் கருதியாம்)

இந்த தாவல்கள் இனிதே அரங்கேறிய பின்னர் அமைச்சரவையும் மறுசீரமைக்கப்படவுள்ளதெனவும், ராஜிதவுக்கு முக்கிய அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளதெனவும் அறியமுடிகின்றது.

மறுபுறத்தில தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால உள்ளிட்டவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவுடனும் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது.

தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு டலஸ் மற்றும் சரித ஹேரத் உள்ளிட்டவர்கள் முன்னெடுக்கும் முயற்சி இன்னும் வெற்றியளிக்கவில்லை.

இறுதியில் இவர்களும் சஜித் கூட்டணியுடனேயே இணைவார்கள் என அரசியல் பிரமுகர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் களநிலைவரம் எவ்வாறு உள்ளது என்பது தொடர்பில் அரச உளவு பிரிவுகள் ஜுலை நடுப்பகுதிக்குள் ஜனாதிபதியிடம் அறிக்கை கையளிக்கவுள்ளன எனவும், அந்த அறிக்கைகளின் பிரகாரமே ஜனாதிபதியின் முடிவு அமையக்கூடும் என சில அரசியல் பிரமுகர்கள் கருதுகின்றனர்.

சிலவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டால், எந்த பக்கம் நிற்பது என்ற குழப்பத்தால் சில உறுப்பினர்கள் முடிவெடுப்பதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். எனவே, தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான பின்னரே அவர்கள் தமது மௌனத்தை கலைத்து நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார்கள்.

அதேவேளை சிறு கட்சிகளை வளைத்துபோடும் ‘ஒப்பரேஷனை’ ரணில் விக்கிரமசிங்க வெற்றிகரமாக முன்னெடுத்துவருகின்றார். இதொகா, ஈபிடிபி, தேசிய காங்கிரஸ், வியாழேந்திரன் அணி என்பன ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.

கருணா, பிள்ளையான் உள்ளிட்டவர்களும் ரணிலுடன் கூட்டு பயணத்துக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் என்பவற்றின் எம்.பிக்கள்கூட ரணிலுடன் ‘நல்லுறவை’ பேணிவருகின்றனர். அடுத்துவரும் நாட்களில் வடக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ரணில் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு திரட்டி புதிய கூட்டணியால் நடத்தப்படும் 2ஆவது மக்கள் கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி மொனறாகலையில் நடைபெறவுள்ளது. இதன்போது பல உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்தி மேடையேறவுள்ளனர்.

ஆர்.சனத்

Related Articles

Latest Articles