யாழ்ப்பாணத்தில் தெங்கு பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் அண்மையில் பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டிருந்தது போல, மலையகத்தில் உள்ள தரிசு நிலங்களில் சுயதொழில் வாய்ப்புகளின் ஊடாக உற்பத்திகளைப் பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம். கிருஸ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் தெங்கு பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் அண்மையில் வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளமை வரவேற்கத் தக்கது.
நாட்டில் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதால் வெளிநாட்டிலிருந்து தேங்காயை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது வரை காலமும் இல்லாத அளவுக்கு ஒரு தேங்காயின் விலை 200 ரூபாவை எட்டியுள்ளது.
அன்றாடம் தேங்காய் பாவனையை மேற்கொண்டிருந்த மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றார்கள். எனவே, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நாட்டின் நலன்கருதி எடுத்துள்ள பயன் மிகுந்த நடவடிக்கையை முழுமனதோடு வரவேற்கிறோம்.
அதேபோல், மலையகத்தில் இனங் காணப்பட்டுள்ள தரிசு நிலங்களிலும் பயனுள்ள வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
மலையகத்தில் 37 ஆயிரம் ஹெக்டயர் தரிசு நிலங்கள் இனம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமது வரவு செலவுத் திட்ட உரையின் போது தெரிவித்திருந்தார்.
அவற்றை வீடமைப்பு, சுயதொழில் வாய்ப்பு முதலான திட்டங்களுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், பெருந்தோட்டக் கம்பனிகள் வீடமைப்புக்கோ பயிர்ச் செய்கை ஊக்குவிப்புக்கோ தரிசு நிலங்களை வழங்குவதில் கவனம் செலுத்தவில்லை.இன்றைய நிலையில் 37 ஆயிரம் ஹெக்டயருக்கு அதிகமாகவே தரிசு நிலங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
அந்த நிலங்களை தோட்டங்களில் தொழில் வாய்ப்பு இல்லாத இளைஞர், யுவதிகளின் சுயதொழில் வாய்ப்புகளுக்காக பகிர்ந்தளித்து பயன்படுத்த முடியும். மலையகத்திலும் தென்னம் பிள்ளைகளை நட்டு தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிக்கலாம்.
அதேபோல், மாட்டுப் பண்ணைகளை ஏற்படுத்தி பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். பால் உற்பத்தியில் எமது நாடு தன்னிறைவு காணக் கூடிய திட்டங்களை மேற்கொள்ளலாம். அத்தோடு, கோழி வளர்ப்பு மற்றும் மரக்கறி பயிர்ச் செய்கைக்கும் தரிசு நிலங்களைப் பயன்படுத்தலாம். இதனால், இறக்குமதியைக் குறைத்து அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.யாழ்ப்பாணத்தில் காட்டுகின்ற அக்கறை போல, மலையகத்திலும் அமைச்சின் அக்கறை பயனுள்ள திட்டங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தலவாக்கலை பி.கேதீஸ்
