“எமது மலையக மக்கள் இந்த அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நம்பியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு துரோகம் இழைக்கப்படுகின்றது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“ஈ.பி.எப். (EPF), ஈ.டி.எப். (ETF) ஆகியவையே மலையக மக்களுக்கான சேமிப்பாக உள்ளன. எனவே, ஈ.பி.எப். மற்றும் ஈ.டி.எப். மீது 14 சதவீத வரி விதிக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டபோதும் நாம் அதனைக் கடுமையாக எதிர்த்தோம்.
அதேபோன்று, 2045ஆம் ஆண்டுடன் முடிவடையவுள்ள பெருந்தோட்டக் குத்தகை ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வதற்குக் குழுவொன்றை அமைப்பது தொடர்பான முன்மொழிவும் வரவு – செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான குத்தகை ஒப்பந்தக் காலம் நீடிக்கப்பட்டால், மலையக மக்களின் காணி உரிமை என்ற கனவு ஒருபோதும் நிறைவேறாது.
எனவே, மலையக மக்களுக்கான காணி உரிமையைத் தடை செய்யக்கூடாது” என்றும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
