” மலையக மக்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளனர். அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டில் அமைதி நிலவ பங்களிப்பு செய்தனர். 200 வருடங்கள் பெரும் பாடு பட்டுள்ளனர். எனவே, அவர்களைத் தொடர்ந்தும் தனிமைப்படுத்த முடியாது. தேசிய இனமாக தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்வதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது சவால் மிகுந்தது எனினும், இதனை செய்ய வேண்டும்.” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மலையக எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில் தேசிய நீர்வளங்கள் அமைச்சரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.
மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக நெருக்கடியினால் மலையக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரைடப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி,
” நாட்டுக்காக மலையக மக்கள் 200 வருடங்கள் பெரும் பாடு பட்டுள்ளனர். அவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளனர். யுத்தம் நடைபெற்ற காலத்தில்கூட அவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அவர்களின் நாட்டின் சமாதானத்திற்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளனர். அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்தை நம்பியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்தும் தனிமைப்படுத்த முடியாது. மலையக மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர்.
எனினும், ஜே.ஆர். ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு இலங்கை பிராஜாவுரிமை வழங்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு இதற்கான முழுமையான பணிகளை முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் செய்துமுடித்தார். எனினும், தோட்டத் தொழிலாளர்கள், மலையக மக்கள் என்று அவர்களைப் பிரித்துப் பார்க்கும் போக்கு இன்னமும் இருக்கிறது. ஆனால் அவர்களை இலங்கை தேசிய சமூகமாக இணைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளை செய்வதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து இதனை முன்னெடுக்க வேண்டும்.
மலையக சமூகத்தில் கற்றுத் தேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்து கொழும்பு போன்ற நகர்புறங்களுக்கு வந்து, செழுமையாக இருக்கின்றனர். ஆனால் இன்னமும் தோட்டத்தில் தொழில் செய்யும் மக்களும் இருக்கின்றனர். இவர்களை தேசிய இனமாக தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்வதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது சவால் மிகுந்தது எனினும், இதனை செய்ய வேண்டும். ” – என்றார்.
