மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் நான்கு மாத குழந்தை உட்பட ஏழு பேருக்கு நேற்று (06.11.2020) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களிடம் கடந்த 05 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. இந்நிலையில் முடிவுகள் இன்று வெளிவந்தன. இதில் எழுவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாமிமலை, ஸ்டொக்கொம் தோட்டம், காட்மோர், பிரொக்மோர், பிரவுன்லொ ஆகிய பகுதிகளில் இருந்தே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஸ்டொக்கொம் பகுதியில்தான் நான்கு மாத குழந்தைக்கும் அவரின் பெற்றோருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டொக்கம் தோட்டத்தில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள், பிரவுன்லோ பகுதியில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்குபற்றியவர்கள் எனவும், காட்மோர் தோட்டத்தில் இனங்காணப்பட்டவர்கள் கொழும்பில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், ஸ்ரஸ்பி தோட்டத்தில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர் கொழும்பில் பேக்கரியொன்றில் பணியாற்றியவர் எனவும் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து இவர்கள் அனைவரும் சுகாதார பாதுகாப்புடன் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
க.கிசாந்தன், நீலமேகம் பிரசாந்த்










