மாமியாரை கொலை செய்த மருமகன் – வலப்பனையில் பயங்கரம்!

வலப்பனை தெரிப்பெய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் மருமகன் மாமியாரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிப்பெய பொலிசார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் (22) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 59 வயது டப்ளியூ.ஜி.ரணசிங்க என்ற பெண் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உலக உணவு திட்டத்தின் கீழ் முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் வறுமையை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அவ்விடத்திற்கு தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்ட குடும்பத்தில் தாய் மற்றும் மகள் ஆகியோர் வந்துள்ளனர்.இதன்போது தாக்குதலை நடத்திய மருமகனும் வந்துள்ளார்.இவர்களிடத்தில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக வாய்த்தர்க்கம் தாக்குதலில் முடிந்துள்ளது. இதன் போது கோபம் கொண்ட (27) வயது மருமகன் தனது மனைவியையும்,தனது மாமியாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இந்த சமயத்தில் மனைவி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ள நிலையில் மாமியாருக்கு வெட்டு பலமாக விழுந்ததால் சம்பவ இடத்திலேயே மாமியார் உயிரிழந்துள்ளார்.

மருமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெரிப்பெய பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles