ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் 19-ம் ஆம் திகதி கையெழுத்தாகிறது. ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக திறக்கப்படுகிறது. அங்கு அமெரிக்க கடற்படையின் முற்றுகையும் உடனடியாக விலக்கி கொள்ளப்படுகிறது.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தொடங்கின.
இதில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அலி கமேனி உட்பட பலர் உயிரிழந்தனர். ஈரானின் பல ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இங்கு நூற்றுக்கணக்கான கப்பல்கள் முடங்கியதால் மாலுமிகளும் சிக்கித் தவித்தனர். இங்கு அமெரிக்க கடற்படையும் முற்றுகையிட்டு ஈரான் துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்தை தடுத்தது. இது உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டை அதிகரித்து விலை உயர்வையும் ஏற்படுத்தியது.
பின்னர், கடந்த ஏப்ரல் 8-ம் ஆம் திகதி இருதரப்பு இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு, போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இறங்கின. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா அல்லது சர்வதேச அணுசக்தி முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என அமெரிக்கா கெடு விதித்தது. இதற்கு ஈரான் சம்மதிக்கவில்லை.
இதன் காரணமாக இரு தரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் நீண்ட இழுபறி ஏற்பட்டது. அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் ஈரானை முற்றிலும் அழித்துவிடுவோம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பல முறை எச்சரித்தார்.
ஆனால், ஈரான் தனது நிபந்தனையில் உறுதியாக இருந்து, அமெரிக்கா தாக்கினால், வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இருதரப்பு இடையே அவ்வப்போது சிறிய அளவில் மோதல்களும் நடந்தன.
இந்த நிலையில், அணு ஆயுத தயாரிப்பை கைவிட ஈரான் சம்மதம் தெரிவித்ததால் சுமார் 2 மாதங்களாக நீடித்த இந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவும், ஈரானும் முடிவு செய்துள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் வரும் 19-ம் திகதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. லெபனானும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் 19-ம் திகதி முதல் அனைத்து கப்பல் போக்குவரத்துக்கும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்று அமெரிக்க ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அமெரிக்க கடற்படை முற்றுகை உடனடியாக நீக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதையடுத்து நேற்று இரவே எண்ணெய் ஏற்றிக் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்லத் தொடங்கிவிட்டதாக ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமைதி ஒப்பந்தம் மூலமாக ஈரான் – அமெரிக்கா போர் உடனடியாக முடிவுக்கு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்படுகிறது. 30 நாட்களுக்குள் அமெரிக்க கடற்படை முற்றுகை நீக்கப்படும். லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும், நிரந்தரமாகவும் முடிவுக்கு வரும்.
எண்ணெய் விற்பனை தொடர்பாக ஈரான் மீதான தடைகள் நிறுத்தி வைக்கப்படும். அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடாது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் அணுசக்தி விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதி ஒப்பந்தம் எட்டப்படும். ஈரானிய சொத்துகளில் 24 பில்லியன் டாலர்களை விடுவிக்க வேண்டும். இறுதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் 60 நாட்களுக்குள் நடைபெறும்.
