இலங்கை போன்ற சிறிய சந்தை வாய்ப்பு உள்ள நாட்டில், பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டுப்பாடு, வெறும் போட்டித்தன்மையின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது என்றும், அதற்காக அரசாங்கத்திடம் வலுவான விலைக்கட்டுப்பாட்டுப் பொறிமுறை இருக்க வேண்டும் என்றும், அதற்காக லங்கா சதொச மற்றும் கூட்டுறவு முறைமையை மேலும் வலுப்படுத்தி அதன் முக்கிய பங்காளியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மூலம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள், சுய-நிதியளிப்பு மூலம் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் திறைசேரியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயற்படும் நிறுவனங்கள் ஆகிய 16 நிறுவனங்கள் ஊடாக, இந்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.
விவசாயிகளின் நெல் மற்றும் தானியங்களை உலர்த்துவதற்காகச் சலுகை அடிப்படையில் இயந்திர உலர்த்திகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறையில் உள்ளதுடன், தற்போது 45 இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பித்த 65 நிறுவனங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 45 நிறுவனங்களுக்கு அந்த இயந்திரங்கள் வழங்கப்படும் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.
நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 9 மொத்த விநியோக மையங்களை நிறுவும் திட்டம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குருநாகல் மற்றும் மாத்தறை மையங்களின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 1000 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய மட்டத்திலான அரிசி பதப்படுத்தும் மையங்களை அமைக்கும் திட்டம், நுவரெலியா உருளைக்கிழங்கு கொள்வனவு மையத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் மொனராகலை தானிய அவரைப் பயிர்கள் பதப்படுத்தும் மையத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் ஆகியவற்றை மீளாய்வு செய்த ஜனாதிபதி, பெரிய வெங்காயம் மற்றும் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்காகவும் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டினார்.
அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் இங்கு தனித்தனியாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், நிறுவன மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இளைஞர் சமூகத்தை இலக்காகக் கொண்டு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் திட்டத்தின் கீழ், புதிய உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் 34 ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இத்துறைக்கு இளைஞர் சமூகத்தை ஈர்ப்பதே இதன் நோக்கம் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.
உணவு ஆணையாளர் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், புதிய களஞ்சியத் தொகுதிகள் மற்றும் சூரிய மின் சக்தி கட்டமைப்புகளை நிறுவும் பணிகளின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம், லங்கா சதொச மற்றும் கூட்டுறவு முறைமையை மேலும் பலப்படுத்துவதன் மூலம் சந்தைப் போட்டியை ஏற்படுத்தி, நுகர்வோருக்கு சிறந்த தரமான சேவையை உறுதி செய்வது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
சுமார் 2100 கூட்டுறவு, மெகா கோப் சிட்டி மற்றும் கோப் சிட்டி ஆகியவை நாட்டில் உள்ளதாகவும், இதன் மூலம் குறிப்பிடத்தக்க சந்தைப் பங்கை மேம்படுத்திக் கொள்வது தொடர்பாகவும், அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அந்த முகாமைத்துவ பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்காகச் சட்டம் ஒன்று வகுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.
கடந்த காலத்தில் பேசப்பட்ட திரிபோஷா நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் அதன் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைத்துச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கும் திரிபோஷா விநியோகிக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அதனை விநியோகிப்பதற்காக போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக லங்கா திரிபோஷா நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ISO தரச்சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் இங்கு மேலும் குறிப்பிடப்பட்டது.
குறித்த உற்பத்திப் பணிகளுக்காக மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளல், களஞ்சியப்படுத்தல் மற்றும் கொள்முதல் செயற்பாடுகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் ஊழியர் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், 06 மாதம் முதல் 03 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் தயாரிப்புகளின் தரத்தை மேலும் மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நிறுவனப்பதிவாளர் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அங்குள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதுடன் அவசியமான சட்டத் திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும இதன்போது தெரிவித்தார்.
நிறுவனங்களைப் பதிவு செய்வதில் நிலவும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, தற்போது தாமதப்பட்டுள்ள 3,000 விண்ணப்பங்களின் பணிகளை விரைவில் முடிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
வணிகத் திணைக்களத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான செயல்திறன் முன்னேற்றம் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், 33 நாடுகளுக்குரிய பிரதிநிதிகள் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் ஊடாக இச்செயற்பாடுகளுடன் இணைந்துள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடப்பட்டது.
எதிர்காலப் பொருளாதார இலக்குகளை நோக்கிப் பயணிக்கையில் வெளிநாட்டுச் சந்தையை வென்றெடுப்பது முக்கியமாகும் என்றும், அதற்காக வணிக அதிகாரிகளின் கடமை இலக்கானது சர்வதேச சந்தை வாய்ப்புகளைக் கண்டறிதல், ஏற்றுமதி இலக்குகளை மேம்படுத்தல் போன்ற துறைகளை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அதற்காகச் சந்தைக் கணிப்புகளை மேற்கொள்வதுடன், வர்த்தக சபைகள் போன்ற நிறுவனங்களுடன் நெருக்கமாகப் செயற்பட்டு அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் எனவும் சுட்டிக்காட்டினார். விரிவடைந்து வரும் புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறிந்து, பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் வணிகத் திணைக்களத்திற்குப் பாரிய பொறுப்புள்ளதாகவும், அதற்குத் தீவிர பங்களிப்பு அவசியமெனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் செயற்பாடுகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நெடுந்தூரப் பேருந்துகள் தரிக்கும் உணவகங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் உணவகங்கள் தொடர்பில் விசேட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.
உணவுப் பொருட்கள் சார்ந்த தரம் மற்றும் விலைக் கட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் மக்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதால், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தீவிர பங்களிப்பின் தேவையையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
பொலித்தின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலையீட்டின் மூலம் பொலித்தின் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியனாகக் குறைக்க முடிந்துள்ளதுடன், பொலித்தினுக்கு மாற்றீடுகளுடன் இத்திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
இலங்கையில் ஆய்வூகூட அங்கீகாரச் செயல்முறையை மேலும் முறைமைப்படுத்துவது தொடர்பாகவும், அதற்காக வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள பண்டாரவளை மற்றும் மாத்தளை பொருளாதார மத்திய நிலையங்களின் நிர்மாணப் பணிகள் மற்றும் மன்னார், தாராபுரம் கூட்டுறவு கிராமத்தின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா உட்பட நிதி அமைச்சின் அதிகாரிகள், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
