தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 660 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இன்று (26) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமுலில் இல்லை. சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் நடமாடியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இன்றுவரை 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.சிலருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு எதிராக எதிர்காலத்தில் நிச்சயம் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
அதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிலர் அறிவிப்பு விடுத்தும் பிசிஆர் பரிசோதனைக்கு வராமல் உள்ளனர். அத்தகையவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.