முச்சக்கரவண்டிகள் மேற்பார்வை; ஒரு மாத காலத்தில் புதிய திட்டம்

முச்சக்கரவண்டிகளை மேற்பார்வை செய்வதற்காக ஒரு மாத காலத்தினுள் திட்டமொன்றை முன்னெடுக்க இருப்பதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் சகல பயணிகள் போக்குவரத்து சேவைகளையும் மேற்பார்வை செய்ய உள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகளை மேற்பார்வை செய்வது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஆட்டோக்களில் ஒவ்வொரு அளவு கட்டணம் அறவிடப்படுவதோடு முறைகேடுகள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகிறது. மீற்றர் இன்றி ஓடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கர வண்டி உரிமையாளர்களுடன் கலந்துரையாடினோம்.

முச்சக்கர வண்டிகளை மேற்பார்வை செய்வதற்காக தனியார் பஸ்களை போன்று மேற்பார்வை நிறுவனமொன்று அவசியம். புதிய நிறுவனமொன்றை ஆரம்பிக்காது முச்சக்கர வண்டிகள் உட்பட சகல பயணிகள் போக்குவரத்து சேவைகளையும் மேற்பார்வை செய்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்க இருக்கிறோம்.இதற்காக சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். மோட்டார் சைக்கிள்கள் கூட சில நாடுகளில் பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுக்களையும் பயன்படுத்தி முச்சக்கர வண்டிகளை முகாமைத்துவம் செய்யும் திட்டம் ஒரு மாதத்தில் முன்னெடுக்கப்படும் என்றார்.

Related Articles

Latest Articles