” பிரிந்து நின்று அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடும் தருணம் அல்ல இது. எனவே, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கவேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாம் நல்லவை குறித்து சிந்திக்கும் அதேவேளை எதிர்மறைவான விளைவுகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்வதற்கும் தயாராகவேண்டும். இராணுவத்தினர், பொதுசுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார தரப்பினர் ஆகியோர் தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிலவேளை மேற்படி கட்டமைப்பு ஏதேனுமொரு கட்டத்தில் ஸ்தம்பிதமடையும்பட்சத்தில் நிலைமை மோசமடையக்கூடும்.
நாம் ஒருவருக்கொருவர் குறைகூறலாம். குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். ஆனால் அவற்றின் ஊடாக வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தமுடியாது. எனவே, தற்போதைய சூழ்நிலையை தேசிய பேரிடராக கருதி அரச பொறிமுறை செயற்படவேண்டும். அதற்கான தேசிய பொறிமுறை உருவாக்கப்படும்பட்சத்தில் அதற்கு முழு ஆதரவும் வழங்கப்படும்.
எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டால் அது எமது நாட்டிலுள்ள முதியவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். மறுபுறத்தில் ஆயுதங்கள்மூலம் இதனை வெற்றிகொள்ளமுடியாது. பிரிந்துநின்று – அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடும் தருணமும் அல்ல இது. ஒரு சமூகமாக செயற்படவேண்டும். அதற்கு நாம் தயார்.” – என்றார் அநுரகுமார திஸாநாயக்க.