யாருக்காக ‘மன்னர்’ கதை சொன்னார் பவித்ரா? பரபரப்பாகும் அரசியல் களம்

“ சுகாதார அமைச்சு பதவியில் திடீர் மாற்றம் வருமென நான் நினைக்கவில்லை. வாழ்க்கையில் எது நடந்தாலும் அதனை மகிழ்ச்சியுடனேயே ஏற்கவேண்டும். எல்லாம் நன்மைக்குதான் என எண்ணி மனதை தேத்திக்கொள்வோம்.” – என்று போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற பிரியாவிடை சந்திப்பின்போதே அமைச்சர் பவித்ரா இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன், மன்னர் கால கதையொன்றையும் அவர் அங்கு எடுத்துரைத்தார்.

“ மன்னரும், புரோகிதரும் ஓர் நாள் வேட்டைக்குச்சென்றுள்ளனர். மானொன்று வந்துள்ளது. அதை நோக்கி மன்னர் அம்பெய்துள்ளார். இலக்கு தப்பியது. இதனால் கவலைடைந்த மன்னன், ஒரு வச்ச குறி தப்பாது, ஏன் இப்படி நடந்தது என புரோகிதரிடம் கேட்டார். ‘எல்லாம் நன்மைக்கே’ என புரோகிதர் பதிலளித்துள்ளார்.

சற்று தூரம் சென்ற பின்னர் மீண்டும் குறி தவறியுள்ளது. இதற்கான காரணத்தையும் மன்னர் கேட்டுள்ளார். இதுவும் நன்மைக்கே என புரோகிதர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் மன்னர் வைத்திருந்த வாளால் அவரின் விரல்கள் வெட்டுபட்டுள்ளன. ஏன் இப்படி நடக்கின்றது என மன்னர் கேட்டபோது, இதுவும் நன்மைக்குதான் என புரோகிதர் கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான மன்னர், புரோகிதரை குழிக்குள் தள்ளிவிட்டு, வேறு திசையில் பயணித்தார். அங்கு அரக்கர் கூட்டமொன்று இருந்துள்ளது. பலி பூஜை நடத்துவதற்கு மனிதனொருவரை அரக்கர்கள் தேடிக்கொண்டிருந்தனர். மன்னரை பிடித்து நீராட வைத்து, பூஜைக்கு கொண்டுசென்றனர். பூரண மனிதரொருவரையே பலி கொடுக்க வேண்டும். ஆனால் மன்னரின் விரல்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து அட, புரோகிதர் சொன்னது உண்மைதான் என யோசித்த மன்னர், அவரை குழிக்குள் போட்டது தவறு என மனம் வருந்தினார். விரல்கள் வெட்டுபட்டதால்தானே நான் தப்பித்தேன் என்பதையும் உணர்ந்தார். புரோகிதரிடம் மன்னிப்பும் கோரினார்.

அப்போது, மன்னரே நீங்கள் என்னை குழிக்குள் தள்ளியதும் நன்மைக்கே. ஏனெனில் உங்களுடன் நான் வந்திருந்தால் என்னை பலி கொடுத்திருப்பார்கள் என புரோகிதர் குறிப்பிட்டுள்ளார். எனவே, என்னை குழிக்குள் தள்ளியவதற்கு நன்றி.

அந்தவகையில் எல்லாம் நன்மைக்குதான் என நினைத்து மனதை தேத்திக்கொள்வோம். சுகாதார அமைச்சில் மகிழ்ச்சியுடன்தான் வேலைசெய்தேன். அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்கினர். எனவே, புதிய அமைச்சருக்கும் அதேபோல ஒத்துழைப்பு வழங்கவும். “ – என்றார்.

Related Articles

Latest Articles