ரணசிங்க பிரேமதாசவின் பலவீனமான குத்தகை ஒப்பந்தத்தால்தான் பெருந்தோட்டத்துறை அழிவை நோக்கி…. – அமைச்சர் ரமேஷ் பத்திரன

” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபா சம்பளம் போதாது என்பதை நாமும் ஏற்கின்றோம். ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இராஜாங்க அமைச்சராக இருந்த வடிவேல் சுரேஷ்கூட தீ குளிப்பதற்கு முற்பட்டார். ஆயிரம் ரூபாவை வழங்க தோட்ட கம்பனிகள் மறுத்தன. நீதிமன்றத்தையும் நாடின. ஆனால் எமது அரசு தலையிட்டுதான் ஆயிரம் ரூபாவை பெற்றுகொடுத்தது. “

இவ்வாறு பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்ட மக்கள் துன்பகரமான வாழ்க்கையை வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கை நிலை மேம்பட வேண்டும். அதற்காக அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

பிரேமதாச காலத்தில் பலவீனமான குத்தகை ஒப்பந்தம்மூலம் பெருந்தோட்டங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதனால் அரச கண்காணிப்பு குறைவு. பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்கள் பற்றி சிந்திப்பதில்லை. தமது பொறுப்பை நிறைவேற்றுவதில்லை. மீள் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. வீதி, சுகாதாரம் என்பவற்றைக்கூட அரசுதான் வழங்கிவருகின்றது. அதனால்தான் 94 களில் 4 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்து 50 ஆயிரமாக குறைவடைந்துள்ளது. எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் இயற்றப்படும் . பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை நிலைமை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ‘அவுட் குரோ’ முறைமை அறிமுகப்படுத்தப்படும். உற்பத்தி செய்யாத இடங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles